வாகனங்கள் பார்க் செய்யப்பட்டதன் பின்னர் அது சேதமடைந்தாலோ, திருடப்பட்டாலோ யாருக்குப் பொறுப்பு என்பது தொடர்பாக முக்கியத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் நமது வாகனங்களைப் பார்க் செய்துவிட்டுச் செல்லும் போது அதற்காக ஒரு ரசீது தரப்படுவது வழக்கம். அந்த ரசீதுகளில் ‘வாகனம் தொலைந்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அல்லது அந்த பார்க்கிங் ஏரியாக்களில் இந்த வாசகங்கள் அடங்கிய போர்ட் ஒன்று இருக்கும். அதன்படி ஒருவேளை வாகனம் தொலைந்துவிட்டால் சட்டப்படி அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது என்பதே நமது புரிதலாக இருக்கும். எனவே தான் வாகனங்களைப் பார்க் செய்து விட்டு திரும்பி வரும்வரை வாகன ஓட்டிகளால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
ஆனால் அந்த புரிதலுக்கு மாற்றாகவும், வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலளிக்கும் விதத்திலும் உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றிற்கு தீர்ப்பளித்துள்ளது. ‘தாஜ் மகால் ஹோட்டல் எதிர் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற அந்த வழக்கில் இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு தங்களது மாருதி சென் காரில் தாஜ் ஹோட்டலுக்கு இருவர் சென்றுள்ளனர், அவர்கள் காரைப் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு உணவருந்த சென்று விட்டனர். ஆனால் அந்த கார் திருடப்பட்டு விட்டது. இது குறித்து ஹோட்டல் தரப்பினரிடம் கேட்ட போது, பார்க்கிங் ரசீதில் குறிப்பிட்டுள்ள ‘இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் மீது ஏதேனும் இழப்பு, திருட்டு அல்லது சேதம் ஏற்பட்டால், நிர்வாகம் அதற்குப் பொறுப்பேற்காது. அதன் காரணமான எந்த கோரிக்கையும் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது’என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டி திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இன்சூரன்ஸ் நிறுவனம் திருடு போன காருக்கு தங்கள் தரப்பிலிருந்து நஷ்டஈடு கொடுத்துவிட்டது. ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நஷ்ட ஈடு கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனம் ஹோட்டல் மீது மாநில நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்றம் 2,80,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி ஹோட்டல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து ஹோட்டல் நிறுவனத்தினர் தேசிய நுகர்வோர் மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் மாநில நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். ‘வாகனத்தை பார்க் செய்து அதனை பதிவேட்டில் குறிப்பிட்டு ரசீது பெற்றுக் கொண்டதும் வாகனத்தின் உரிமையாளருக்கும், பார்க்கிங் உரிமையாளருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அதன்படி வாகனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பார்க்கிங் உரிமையாளருக்கு வந்து விடுகிறது. வாகனம் சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அதற்கு பார்க்கிங் உரிமையாளரின் கவனக்குறைவே காரணம் என்று எடுத்துக்கொள்ளப் படும். இதிலிருந்து விடுபட தான் கவனக் குறைவாக நடந்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு பார்க்கிங் உரிமையாளருக்கு உள்ளது. அவ்வாறு அவர் நிரூபிக்கத் தவறினால் வாகனம் திருடப்பட்டதற்கு பார்க்கிங் நிறுவனம் பொறுப்பாகி விடுகிறது’ என்று குறிப்பிட்டு தாஜ் ஹோட்டல் நிறுவனம் தங்களது கவனக் குறைவால் கார் திருடப்படவில்லை என்று நிரூபிக்கத் தவறிவிட்டதால் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டிய பொறுப்பு ஹோட்டல் நிறுவனத்திற்கே உள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறி தீர்ப்பளித்தது.
இதன்படி பார்க் செய்யப்பட்ட வாகனங்கள் இனி அதிக பாதுகாப்புடன் கவனிக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.�,