காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு வெளியே இருந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தும், காஷ்மீருக்கு என்ன நடக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத சூழல்தான் நிலவி வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் உடனடியாக இயல்பு நிலையைக் கொண்டுவர வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (செப்டம்பர் 26) டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசியப் பேரியக்கத்தின் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தடையை மீறி இந்த பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ஆதரவு தெரிவித்து சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்ட சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எங்களின் கண் முன்பாகவே எங்கள் இன விடுதலைப் போராட்டம் அழித்து நாசமாக்கப்பட்டது. வலி தாங்கிய மக்கள் நாங்கள். எங்களால்தான் இன்னொரு தேசிய இனத்தின் வலியை உணர முடியும். ஈழத்தில் என்ன நடந்ததோ அது இன்றைக்கு காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது. 370 சட்டப்பிரிவு என்பது காஷ்மீர் மக்களின் உரிமை. அது பிச்சை போடப்பட்டதில்லை.
எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது காஷ்மீர் மக்களின் விருப்பப்படியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,ராணுவத்தை குவித்து, தலைவர்களை சிறைவைத்துவிட்டு, மக்களை திறந்த வெளிச் சிறையில் வைத்துவிட்டு, அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தோம் எனக் கூறுவது வேடிக்கையானது. வேதனையானதும் கூட” என்று தெரிவித்தார்.
காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்களிடம் நீங்கள் இந்தியர்கள், எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்கின்றனர். ஆனால், இங்குள்ள இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர் என்று கூறி வெளியேறச் சொல்கின்றனர். இது என்ன மாதிரியான அணுகுமுறை என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
�,