எங்கள் பகுதியில் இருந்து வெளியேறு: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை!

Published On:

| By Balaji

இந்தியாவை ஒட்டியுள்ள மிகச் சிறிய நாடான நேபாளம், தங்கள் நாட்டின் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

நேபாளம், இந்தியா மற்றும் திபெத்தின் முக்கோண சந்திப்பில் உள்ள கலபானி பகுதி நேபாளத்தைச் சேர்ந்தது என்றும், இந்தியா உடனடியாக தனது இராணுவத்தை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் நேபாள பிரதமர் கே. பி. ஓலி நேற்று (நவம்பர் 17) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு இந்திய அரசால் புதிய இந்திய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் கலாபனியை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. இது நேபாளத்தில் கடும் எதிர்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான நேபாள யுவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஓலி, “எங்கள் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தைக் கூட எந்த நாட்டாலும் ஆக்கிரமிக்கப்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியா அதை காலி செய்ய வேண்டும்” என்று கூறினார். இந்தியா தனது இராணுவத்தை எங்கள் நிலத்திலிருந்து விலக்கிக் கொண்ட பிறகுதான் இந்தியாவுடன் பேச முடியும்” என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர்ளை அழைத்து இதுகுறித்து முன்னதாக விவாதித்தார் ஒலி. நவம்பர் 6 ம் தேதி , நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கலபானி பகுதி நேபாள எல்லைக்குள் உள்ளது என்பதில் நேபாள அரசு தெளிவாக இருக்கிறது” என்றார்.

இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில், “எங்கள் வரைபடம் இந்தியாவின் இறையாண்மையை துல்லியமாக சித்தரிக்கிறது. புதிய வரைபடம் நேபாளத்துடனான நமது எல்லையை எந்த வகையிலும் திருத்தவில்லை. நேபாளத்துடனான எல்லை வரையறுப்புப் பயிற்சி தற்போதுள்ள பொறிமுறையின் கீழ் நடந்து வருகிறது ” என்று கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் நேபாள பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share