முக்கிய சீடரைக் காணோம்: நித்தி மீது இன்னொரு வழக்கு!

Published On:

| By Balaji

நித்யானந்தா விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நித்யானந்தா தன் மீது கர்நாடகா ராம் நகர் நீதிமன்றம், அகமதாபாத் நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்று (டிசம்பர் 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த அங்குலட்சுமி என்பவர் புதிய முறையீட்டைச் செய்திருக்கிறார்.

இதுபற்றி ஈரோட்டிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பிரகாஷ் என்பவரிடம் பேசினோம்.

“நித்யானந்தா ஆசிரமத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்த நித்ய ப்ரணா சுவாமி என்பவர் எனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரர். அவரது இயற்பெயர் முருகானந்தம். பல வருடங்கள் முன்பே நித்யானந்தா ஆசிரமத்துக்குப் போய்விட்ட முருகானந்தம் பின் ஆசிரமத்தில் நித்தியானந்தாவுக்கு நெருக்கமாகிவிட்டார். தன் பெயரை நித்ய ப்ரணா சுவாமி என்று மாற்றிவிட்டார். அவ்வப்போது ஆசிரமத்துக்கு சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவோம். அவரும் வந்து செல்வார். இரண்டு வருடம் முன்பு அவரது தந்தை இறந்துவிட்டார். அதன் பின் அவ்வப்போது வந்து சென்றுகொண்டிருந்தார். அப்புறம் இங்கே வருவதே இல்லை. நாங்களாக போனாலும் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவரைப் பார்த்தே நான்கு மாதங்கள் ஆயிற்று. பிடதி போய் விசாரித்தாலும் பதில் சொல்ல மறுக்கிறார்கள். அங்கே போய் பேசிப் பார்த்தாயிற்று, சண்டையும் போட்டாயிற்று. ஆனால், முருகானந்தத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவர் இருக்கிறாரா, இல்லையா என்றே கவலையாக இருக்கிறது. முருகானந்தத்தின் தாயார் அங்குலட்சுமி தன் மகனைப் பார்க்க விருப்பப்படுகிறார்.

எனவேதான் வேறு வழியில்லாமல் சட்ட நடவடிக்கை மூலம் எங்கள் குடும்பத்து உறுப்பினரை மீட்க முயன்றிருக்கிறோம். இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்ய ப்ரணா சுவாமி என்கிற முருகானந்ததை மீட்டுத் தருமாறு ஹேபியஸ் கார்பஸ் மனு தொடுத்திருக்கிறோம். நித்யானந்தாவுக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்” என்று கூறினார் பிரகாஷ்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் நித்யானந்தாவுக்கு அடுத்த சட்ட சிக்கல் காத்திருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share