ஊழியர்களுக்கு 1.12 லட்சம் போனஸ் வழங்கும் மைக்ரோசாப்ட்!

public

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1.12 லட்சம் வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும், வேலையை விட்டும் நீக்கி வருகின்றன. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், அரசும் மக்களுக்கு நிதியுதவி, கடனுதவி உள்ளிட்டவை வழங்கி வருகிறது. அதுபோன்று, பல கார்ப்ரேட் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துவருகின்றன.

கொரோனா காலத்தில் மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் தடையின்றி தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு கொரோனா கால ஊக்கத்தொகையாக ரூ.1.12 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் தலைமை மக்கள் அலுவலர் கதீலன் கோகன் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், “மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மார்ச் 31, 2021ஆம் ஆண்டிற்கு முன் வேலைக்கு சேர்ந்த கார்ப்பரேட் துணை தலைவர் பதவிக்கு கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு ரூ.1.12 லட்சம் போனஸ் தொகை வழங்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கும், பகுதி நேர ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

மைக்ரோசாப்டின் கிளை நிறுவனங்களான லிங்க்ட் இன், கிட்ஹப் மற்றும் ஸெனிமேக்ஸ் ஆகிய நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படாது.

1,75,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தலா,ரூ.1,11,863 போனஸாக வழங்கப்படும். இதற்காக 200 மில்லியன் டாலர் செலவிடப்படவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று கால ஊக்கத்தொகையாக ஃபேஸ்புக் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 74,500 ரூபாயும், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 37,200 ரூபாயும் போனஸாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *