இந்தியாவை உலுக்கிய ஆணவக் கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட தொழிலதிபர் மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ். வைசியா சமூகத்தைச் சேர்ந்த இவரின் மகள் அம்ருதா. அம்ருதாவும். தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரனாய் குமாரும் காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டனர். சாதி மறுப்பு திருமணம் என்பதால், பெண் வீட்டாரிடம் இருந்து பெரிய எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த தனது மனைவியை பிரனாய் செப்டம்பர் 14, 2018 அன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி, பிரனாயை பின்னிருந்து தாக்கி, கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் அம்ருதாவின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.
உடுமலை சங்கர் ஆணவக் கொலையைத் தொடர்ந்து பிரனாய் கொலை செய்யப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரானாய் இறந்து நான்கு மாதத்தில் அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது கணவர் வீட்டில் தங்கியிருந்த அம்ருதாவுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த ஆணவக் கொலை வழக்கில் 90நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அம்ருதாவின் தந்தை உட்படக் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் நடந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் தற்போது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கைரதாபாத்தில் உள்ள ஆர்யா வைஷ்ய பவன் ஹோட்டலில் அறை எண் 306ல் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர், இன்று அவரது அறைக்குச் சென்று பார்த்த ஊழியர்கள் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**கவிபிரியா**�,”