மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதுபோலவே நான்காம்கட்ட ஊரடங்குக்கான வழிகாட்டு முறை மற்றும் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
**நீட்டிக்கப்படும் தடைகள்**
அந்த அறிவிப்பில், நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும். மருத்துவச் சேவைக்கான உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் இயங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. மே 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான கல்வி நிலையங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்படுகிறது. அதுவரை ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்படுவது ஆதரிக்கப்படும்.
ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகளில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. ஆனால், ஹோம் டெலிவரி மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள், மால்கள், உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், ஆடிட்டோரியம் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறந்துகொள்ளலாம்.
அனைத்துவிதமான சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்துவிதமான வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது.
இதுபோல கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நிபந்தனைகளுடன் சில நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் வாகனங்கள் அல்லது பேருந்துகள் மூலம் மாநிலத்துக்குள்ளான பயணம் அனுமதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்குவது குறித்து நிபந்தனைகளுடன் மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கோ அல்லது வெளியே செல்வதற்கோ தடை விதிக்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் ஆகியோர் அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவையைத் தவிர்த்து வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். சிவப்பு மண்டலங்களிலும் சலூன்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம்.
**விதிமுறைகள்**
இதுபோலவே சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனை மற்றும் அபராதத்துக்குரிய குற்றமாகும். அனைவரும் பொது இடங்களிலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியுடன் 50 பேருக்கு மிகாமல் உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும். துக்க நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகளின்போது சமூக இடைவெளியுடன் 20 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பதற்குத் தடை செய்யப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது. ஒருவருக்கும் மற்றொருவருக்கும் ஆறு அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். பணியாளர்களை இயன்ற அளவு வீட்டிலிருந்தபடி பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
சிவப்பு, ஆரஞ்சு பச்சை மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்.
**எழில்**�,