10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

Published On:

| By Balaji

பத்தாம் மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2021-2022ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தங்கள் பள்ளியில் 10, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரத்தை ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 19 வரையிலான நாள்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் தேர்வுக் கட்டணம், மதிப்பெண் பதிவேடு கட்டணத்தினையும் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ஒரு சில பள்ளிகளுக்கு மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தினைச் செலுத்துவதற்கும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை கூடுதலாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதுவே,10, 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன்பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும், 10, 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியினை ஜனவரி 31ஆம் தேதிக்குள் நிறைவுசெய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share