பகலிரவு டெஸ்ட் போட்டியில் கோலி நிகழ்த்திய சாதனை!

Published On:

| By Balaji

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்க தேசம் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று (நவம்பர் 22) துவங்கிய இந்த போட்டியில் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், அதிக டிக்கெட் விற்பனையை எதிர்நோக்கியும் புதிதாக சில விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி இந்த டெஸ்ட் மேட்ச் பகலிரவு போட்டியாக மாற்றப்பட்டதுடன் ரெட்பால் போட்டியாக இருந்தது பிங்க் பால் போட்டியாக மாற்றப்பட்டது. பிங்க் நிறப்பந்துகளில் விளையாடுவது போட்டியாளர்களுக்கு அதிக சவாலைக் கொடுக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று(நவம்பர் 22) துவங்கிய ஆட்டத்தில் டாஸை வென்று வங்க தேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக ஆடினார். உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்களையும், ஷமி இரண்டு விக்கெட்களையும் எடுத்தனர்.

தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆடிய ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, புஜாராவுடன் இணைந்து பேட்டிங் செய்யத் துவங்கினார். 55 ரன்களை எடுத்து புஜாரா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ரஹானே கோலியுடன் இணைந்தார். 46 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்களை இழந்த இந்திய அணி 174 ரன்களை எடுத்திருந்தது.

இன்று மீண்டும் துவங்கிய மேட்சில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 136 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டனாக இது அவருக்கு 20-ஆவது சதம் ஆகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நிகழ்த்தியிருந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

இதன்மூலமாக பகலிரவுப் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்த கோலி, டெஸ்ட் மேட்ச்களில் 27 ஆவது சதத்தையும், தேசிய அளவிலான போட்டிகளில் 70 ஆவது சதத்தையும், சர்வதேச அளவில் 41-ஆவது சதத்தையும் அடித்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share