11 பணியிடங்களுக்கான நேர்காணலுக்குக் குவிந்த 1000 பேர்!

Published On:

| By Balaji

/

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுத் தரப்பில் நிரப்பப்பட இருந்த 11 பணியிடங்களுக்கு 1000த்துக்கும் அதிகமானோர் குவிந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு துறையில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 11 பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், வெறும் 11 இடங்களுக்கு 1000த்துக்கும் அதிகமானோர் குவிந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நேர்காணலுக்குக் கல்லூரிபடிப்பு முடித்த மாணவர்களும் வந்துள்ளனர். நீண்ட வரிசையில் அவர்கள் நேர்காணலுக்காகக் காத்திருப்பதைக் காண முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் கிடைத்த வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்தவர்களும், புதிதாக வேலை தேடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share