தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது குறித்தும் இரண்டாகப் பிரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது உள்ள பல்கலையை ஆய்வு பல்கலைக்கழகமாக மாற்றவும், புதிதாக ஒரு பல்கலையை உருவாக்கவும் திட்டமிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆய்வு பல்கலைக்கழகமாக மாற்றப்படும்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் இருக்கக்கூடிய ஆய்வு மாணவர்களும் அண்ணா பல்கலை வந்து ஆய்வு மேற்கொள்ள எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலை பிரிப்பது வரவேற்கத்தக்கது என்று துணைவேந்தர் சூரப்பா நேற்றைய (டிசம்பர் 21) செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவு நிர்வாக ரீதியாகச் சிறந்த முடிவு எனத் தெரிவித்துள்ள அவர், பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் பெயரில் மாற்றமிருக்காது எனக் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே சிறப்பு அந்தஸ்துக்காக விண்ணப்பித்ததாகவும், சிறப்பு அந்தஸ்து கிடைக்கப் பெற்ற பின்பும் அண்ணாவின் பெயரிலேயே இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
”அண்ணா பல்கலையைப் பிரிப்பதன் மூலம் நிர்வாக ரீதியாகவும், இணைப்பு கல்லூரிகளைக் கண்காணிக்கவும் வசதியாக இருக்கும். கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்டுப் பிரிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் நடவடிக்கையில் குழப்பங்கள் ஏற்படாதவாறு அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்” என்றும் சூரப்பா கேட்டுக்கொண்டார். அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல்கலை பெயரை மாற்றக் கூடாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,