சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவமான சரவணா ஸ்டோர்ஸின் கிளைகள் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது. சென்னையிலேயே தி.நகர் , புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன.
இந்நிலையில் வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்தல், கணக்கில் வராத முதலீடு உள்ளிட்ட காரணங்களால் டிசம்பர் 1ஆம் தேதி சரவணா ஸ்டோர்ஸூக்கு சொந்தமான கடைகள் அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் ஆகியவற்றில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். நெல்லை, மதுரையில் இருக்கும் கிளைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடைகளில் நடந்த வியாபாரம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி, அதன் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாவது நாள் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடையின் வங்கி பரிவர்த்தனை, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் கொள்முதல் மற்றும் இருப்பு விவரங்கள், உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித் துறையினரின் சோதனை நீடிப்பதால், மிகப்பெரிய அளவில் வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சோதனையின் முடிவில்தான் எத்தனை கோடி அளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்பது தெரியவரும்.
இந்தச் சோதனையால் ஜவுளிக்கடைகள், தங்க நகை கடைகள், வீட்டு உபயோக பொருள்கள் கடைகளில் மூன்று நாட்களாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரெய்டு உடன், தொழிலில் நட்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
**-வினிதா**
�,