{பணி நியமனத்துக்காக மதம் மாறினால் பணி நீக்கம்!

Published On:

| By Balaji

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணி பெறுவதற்காக மதம் மாறினால் உடனடியாக வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்ட கவுதமன் என்பவருக்குப் போதிய கல்வித் தகுதி இல்லாத நிலையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று (ஜூன் 1) நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய கல்வி தகுதியை ஆராயாமல், முறையாக விசாரணை செய்யாமல் பணி நியமனம் வழங்கப்பட்டது மட்டுமில்லாமல், பதவி உயர்வு வழங்கியதும் தவறு. பதவி உயர்வு வழங்கியதற்கான உத்தரவை ரத்து செய்வதுடன், அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், குறிப்பாக பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும்போது வெளிப்படைத்தன்மையைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் பணி நியமனத்திற்கான நேர்காணலுக்கு முன்பு விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

மேலும், இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெறுவதற்காக அல்லது பதவி உயர்வு பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் பணி நியமனத்தை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து யாரேனும் பணியில் சேர்ந்து இருப்பதாகக் கண்டறிந்தால், அவர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்து, ஊதியத்தைத் திரும்ப வசூலிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நேர்முகத் தேர்வை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும், பணியாளர் தகுதி குறித்த ஆய்வு விசாரணையை மூன்று மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share