Uவானிலை: கனமழை முதல் மிகக் கனமழை!

Published On:

| By Balaji

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நவம்பா் 29, 30, டிசம்பா் 1, 2 ஆகிய 4 நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் நேற்று முன்தினம்(நவம்பர் 27) இரவு 14 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் கிழக்கு தாம்பரம் – வேளச்சேரி சாலை, மேற்கு தாம்பரம் – பெருங்களத்தூர் பகுதிகளை இணைக்கும் இரும்புலியூர் பாலம், கிழக்கு – மேற்கு தாம்பரம் பகுதி களை இணைக்கும் ரயில்வே சுரங்கப் பாதை ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. நேற்று(நவம்பர் 28) இரவும் சென்னையில் நல்ல மழை பெய்தது.

மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, “வரும் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1, 2ம் தேதிகளில் தமிழகத்தில் மழை அதிகளவு பெய்யும்” எனக் கூறினார். மேலும் வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில், “நமக்கு வில்லனான வறண்ட காற்று தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் மிக விரைவில் தாக்க உள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒருநாளாவது இரவு தொடங்கி காலை வரை கனமழை பெய்யும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்துவிடும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று(நவம்பர் 28) முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் 12 செமீ, லால்பேட்டையில் 9 செமீ மழை பெய்துள்ளது. திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்தது. திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. நாகை, வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share