நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு: விவசாயிகள் உயிருக்கு ஆபத்து!

Published On:

| By Balaji

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்ட களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி, 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது

** சட்டத்தைத் திருத்தத் தயார்**

இதனிடையே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (மார்ச் 7) தேசிய விவசாய மாநாட்டில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “புதிய வேளாண் சட்டங்களில் தவறு இருந்தால், சுட்டிக்காட்டுமாறு விவசாயச் சங்கங்களுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், இதுவரை அவர்கள் ஒரு தவறினை கூட சுட்டிக்காட்டவில்லை.

வேளாண் சட்டங்களை திருத்தியமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதன்மூலம் புதிய சட்டங்களில் தவறு இருக்கிறது என அர்த்தமில்லை. மாறாக, விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை மத்திய அரசு எடுக்கிறது” என தெரிவித்தார்.

ஆனால் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வகையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறுகையில், புதிய சட்டங்களை முற்றிலுமாக நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடருமே தவிர, பலவீனமாகாது” என குறிப்பிட்டார்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விவசாய பெண்கள், டெல்லி சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் அமைந்துள்ள விவசாயிகளின் போராட்டக் களங்களுக்குப் பொறுப்பேற்கிறார்கள். சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் உறுப்பினரும், வேளாண் தலைவர்களில் ஒருவருமான கவிதா குரு கிராந்தி, “ போராட்ட மேடையைக் கையாளுதல், உணவு, பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் ஈடுபடவுள்ளனர். வேளாண் சமூகத்தில் பெண்களும் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் பெண்கள் போதுமான அங்கீகாரம் பெறவில்லை” என்று தெரிவித்தார். அதுபோன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள் டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே நேற்று நள்ளிரவு சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்ட களம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஹரியானா எல்லையான சிங்கு பகுதியில், நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். மர்ம நபர்கள் வந்த வாகனத்தின் நம்பர் பிளேட், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதால், அவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share