fபோர் இல்லாத ஒரு புனித பூமிக்கான குரல்!

Published On:

| By Balaji

பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் கடந்த மாதமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று(நவம்பர் 20) இப்படத்தின் பாடல்கள் வெளியாகியது. சுயாதீன இசைக்கலைஞர்களில் முக்கியமான தமிழ் இசைக்கலைஞராக அறியப்படும் டென்மா இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

முன்னரே, இப்படத்தின் *நிலமெல்லாம்*, *மாவுலியோ மாவுலி* என்ற இரண்டு பாடல்களை வெளியிட்டது படக்குழு. அதனைத் தொடர்ந்து, படத்தில் மீதமுள்ள 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.

**இருச்சி**

தென் மாவட்டங்களில் திருவிழாவில் ஒலிக்கும் பாரம்பரிய நாட்டுப்புற பாடலை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் டென்மா. *எத்தன வேண்டினாலும் எத்தன வேண்டினாலும்/அத்தனைக்கும் சாமி உண்டு/ சாதி பித்துகளை தீர்பத்தற்கு/நீ ஜென்மம் கொண்டு வாடியம்மா* என இருச்சி அம்மனிடம் வேண்டும் செந்தில் கணேஷின் குரலில் துவங்குகிறது பாடல்.

உமா தேவியின் வரிகளில் உருவான இப்பாடலில் தவில், நாதஸ்வரம், பம்பை, உருமி, தப்பாட்டம் என கதை நிகழும் நிலப்பரப்போடு துடிப்பாய் வந்திருக்கிறது பாடல்.

நிலப்பரப்பு மாறிக் கொண்டே இருப்பது போல அமைக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதைக்கு ஏற்றவாறு பாடல்களின் இசைக்கருவியும் கவனமாக சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு விதமான அனுபவத்தை கொடுக்கிறது.

**இருள் வானம்**

காதலனுடம் பயணப்படும் காதலியின் மனதை பிரதிபலிப்பது போல அமைந்துள்ள பாடல் ‘இருள் வானம்’. *இந்த கருக்கினில் மலருது யுகமே/இன்பக் கருப்புகள் தனிமையின் மயமே/எம்மானே* என வரிகளில் மயக்கத்தை ஏற்படுத்துகிறார் உமா தேவி. *பொழிந்திடும் நிலவினிலே/நனைந்தேன் அருகில் நான்* என சுஷா-வின் குரல் கேட்பவரையும் காதலில் திளைக்கவைக்கிறது .

நள்ளிரவு பயணத்திற்கான வழித்துணை இந்த *இருள் வானம்*.

**தலைமுறை**

ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு நோக்கம் இருக்கும். அப்படி ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் பாடலாகவும், படைப்பாளனின் அக உலகை வெளிப்படுத்தும் குரலாகவும் வந்துள்ளது இப்பாடல். இந்த ஆல்பத்தின் முக்கியமான பாடலாகவும் இது அமைந்திருக்கிறது.

*‘தாயே இறந்த பின்னால் தாயகம் இனிதாகுமோ?

எழுகிற கோபம்

விடை தேடுமோ?

வருங்காலமும்

புவி மீட்காதோ..!!!

தலைமுறை தலைதூக்குமா?*

என போரின் வலிகளை வரிகளாக மாற்றியிருக்கிறார் பாடலாசிரியர் அறிவு. இப்பாடலின் ‘லிரிக்கல் வீடியோவில்’ இரண்டாம் உலகப் போர், இலங்கை, வியட்நாம், சிரியா என வரலாறு எங்கும் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.

குண்டுக்கு எல்லைகள் தெரியாது, குழந்தைகள் தெரியாது, இனம், மொழி, நிலம் தெரியாது..

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share