ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அங்கு தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், ஆளுநர் சத்ய பால் மாலிக் இரண்டு பகுதிகளையும் நிர்வகித்துவந்தார்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (அக்டோபர் 25) வெளியிட்ட அறிவிப்பின்படி, சத்ய பால் மாலிக் கோவா மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான முர்மு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்தவர். மத்திய நிதியமைச்சகத்தில் செலவினச் செயலாளராக பணியாற்றியவர்.
இதுபோல லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ஆர்.எஸ்.மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1977 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருந்துள்ளார். தலைமை தகவல் ஆணையராகவும் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிசோரம் மாநில ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார்.�,