திருக்குறுங்குடி அருகே காதல் விவகாரத்தில் 8 மாத குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகரை அதிர வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவசங்கரன் (30) லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் திருக்குறுங்குடி அருகேயுள்ள மகிழடியைச் சேர்ந்த செவிலியராக பணியாற்றி வரும் ரோஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
சிவசங்கரன் தான் காதலித்த ரோஸை திருமணம் செய்து தருமாறு பெண்ணின் பெற்றோரான ரசல்ராஜ், எப்சிபாய் ஆகியோரிடம் பேசியுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த சிவசங்கரன் இன்று (மார்ச் 20) காலை ரோஸ் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று ரசல்ராஜ், எப்சிபாயை வெட்டியுள்ளார். மேலும் அருகில் உறங்கிக் கொண்டிருந்த ரசல்ராஜின் பேத்தி 8 மாத குழந்தையையும் வெட்டியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த ரசல்ராஜ், சிவசங்கரன் கையில் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி சிவசங்கரனை தாக்கியதும், உடனே அங்கிருந்து அவர் தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்குறுங்குடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 8 மாத குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸார் கொலைவழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசல் ராஜின் மூத்த மகளான ஏஞ்சலின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் குழந்தையை அப்பா, அம்மாவின் பராமரிப்பில் வளர விட்டுள்ளார்.
அண்மையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்தது.
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவை சேர்ந்தவர் ரவி ( 52). இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான நம்புராஜ், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில மாதங்களாக மீனா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சலங்குக்கார தெருவில் உள்ள பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். இருப்பினும் மீனாவுக்கும், நம்புராஜூக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஜான்சிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் குழந்தையை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நடந்து செல்லும் போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூங்கொடியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா அவரை தடுக்க முயன்றார். உடனே நம்புராஜ், மீனாவின் கழுத்திலும் குத்தினார்.
இதில் தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே நம்புராஜ், தனது குழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுபோன்று குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே முதியவர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர் மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த செல்லநாடார் ( 67) என்பது தெரிய வந்தது. கடந்த சில மாதமாக இவர் குளச்சல் மீன் பிடித்துறைமுக பகுதியில் பிச்சை எடுத்து இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள கடை திண்ணையில் உறங்கி வந்துள்ளார்.
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, 16வயது சிறுவன் ஒருவன் கொலைசெய்தது தெரியவந்தது.
குளச்சல் பகுதியில் நடந்த சில திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இச் சிறுவன் சம்பவத்தன்று பணத்திற்கு ஆசைப்பட்டு முதியவர் மீது கல்லைப்போட்டு கொன்று விட்டு, அவரிடம் இருந்த பிச்சை எடுத்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு துறைமுகப்பகுதியில் நின்ற ஒரு மொபட்டையும் திருடி சென்றுள்ளான். இதையடுத்து, சிறுவனையும், சிறுவனுக்கு உதவியாக இருந்தவரையும் போலீசார் கைதுசெய்தனர்.
இதுபோன்ற கொலை குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-சக்தி பரமசிவன்
�,”