தமிழகத்தில் இ பாஸ் தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், இ பாஸ் நடைமுறை தொடருமா? ரத்து செய்யப்படுமா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது அமலில் உள்ள 7ஆம் கட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே, மாவட்டங்களுக்கு இடையேவும், மாநிலத்துக்கு இடையேவும் பயணிப்பதற்குத் தமிழக அரசு இ பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியது.
இறப்பு, திருமணம் உள்ளிட்ட அவசர காரணங்களுக்காகச் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனினும் உறவினர் மரணம், உடல்நிலை பாதிப்பு போன்ற அவசர காரணங்களுக்காக விண்ணப்பித்தாலும் எளிதில் பாஸ் கிடைப்பதில்லை என்று மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சூழலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மத்திய அரசு இ பாஸ் நடை முறையைக் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. எனினும் தமிழகத்தில் இ பாஸ் முறை நடைமுறையிலிருந்து வந்த நிலையில், இதனைப் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
எனவே, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் வழங்கப்படும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா ஆகஸ்ட் 22ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தார். அதில் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கக் கூடாது. அவ்வாறு தடைவிதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்திலும் இந்த முறையை ரத்து செய்வது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தியுள்ளனர்.
முதல்வர் பழனிசாமி, நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிற்பகல் 3 மணிக்குத் தலைமைச் செயலகத்திலிருந்தபடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட அளவில் வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்தச்சூழலில் இ பாஸ் முறையை ரத்து செய்தால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், எனினும் இதுகுறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தித் தான் முடிவெடுக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பரிசோதனையை அதிகரிக்கும்போது நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்தே தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-கவிபிரியா**�,