கொரோனா பீதி: கைக்குலுக்குவதைத் தவிர்த்த ட்ரம்ப்

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் ஆகியோர் இந்தியப் பாரம்பரிய முறையில் வணக்கம் செலுத்திக் கொண்டனர்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசால் 1,25,293 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர், 4600 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் ஒரு பகுதியாக வெளியில் சென்று வந்தால் கை கழுவ வேண்டும், கண், மூக்கு பகுதிகளை அதிகம் தொடக்கூடாது, ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைக்குலுக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல உலக நாடுகளும் இந்திய முறைப்படி வணக்கம் செலுத்தும் முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. அதுபோன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இந்தியப் பாரம்பரிய முறைப்படி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 12) இருவரும் சந்தித்துப் பேசியபோது இருவரும் கை குலுக்கிக் கொள்ளாமல் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், “நாங்கள் கை குலுக்குகிக் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் நின்றோம். அது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் தற்போது தான் இந்தியா சென்று திரும்பி வந்தேன். அங்கு யாருடனும் நான் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. அது மிகவும் எளிமையானது. ஏனென்றால் அவர்கள் இவ்வாறுதான் (வணக்கம்) பழக்கி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். அதன்படி, ஒட்டுமொத்த உலகத்தையே இந்திய முறைப்படி வணக்கம் செலுத்த வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

முன்னதாக அமெரிக்க அதிபரைச் சந்தித்துவிட்டுச் சென்ற பின், பிரேசில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share