ஐஐடி மாணவி தற்கொலை: நீதி கேட்டுப் போராடும் தந்தை!

Published On:

| By Balaji

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக, கேரள மாநில மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமாவின் இறப்புக்கு நீதி கேட்டு அவரது தந்தை போராடி வருகிறார்.

நேற்று (நவம்பர் 15) சென்னை வந்த மாணவியின் தந்தை , தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தனது மகளின் இறப்புக்கு நீதி கேட்டும், தற்கொலைக்கு காரணமானவர்கள் என கூறப்படும் பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் புகார் மனு கொடுத்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாத்திமா இறப்புக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருவரும் உறுதியளித்தனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

முதல்வர், டிஜிபியை தொடர்ந்து பாத்திமாவின் தந்தை , திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கரும் உடன் இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், முதல்வர், டிஜிபியைத் தொடர்ந்து, பாத்திமா தற்கொலை தொடர்பாகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தோம். அவர் விவரங்களைக் கேட்டறிந்தார். நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் இதுகுறித்து குரல் எழுப்புவார்கள். ஐஐடி மத்திய அரசு நிறுவனம் என்பதைக் காரணம் காட்டி தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது. தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தனர்.

”அதே போன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் குரல் எழுப்பும். முஸ்லிம் மாணவர் பேரவையினர் போராட்டம் நடத்தினார்கள். பாத்திமா தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது.” என்று முகம்மது அபூபக்கர் கூறியுள்ளார்.

பாத்திமாவின் தந்தையுடனான சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பாத்திமா மரணம் தற்கொலை அல்ல. அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது. அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதைத் தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

பாத்திமா இறப்பதற்கு முன்னதான சிசிடிவி காட்சிகளை கேட்டதற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்வதற்கான கயிறு எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை என்றும் அப்துல் லத்தீப் சந்தேகம் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share