கொரோனா வைரஸ் தொடர்பாக இன்றைய சட்டமன்ற விவாதத்தின் போது அனைத்து கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கொரோனா தொடர்பான தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றன. இந்த வைரசைக் காட்டிலும் வதந்திகள் அதிகமாகப் பரவுகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் ஜனவரி மாதம் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள், வயதானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பாதித்த நாடுகளுக்குச் செல்வது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவி வரும் கேரளாவுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். மதுரை, தாம்பரம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் அமைக்கப்படும். போதுமான மாஸ்க் மற்றும் கொரோனா தடுப்பு மருந்துகள் ஆகியவை இருக்கின்றன என்று தெரிவித்தார்.
அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, கொரோனா பாதிப்பு குறித்து அரசுதான் பீதியைக் கிளப்புகிறது. தமிழகத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் போன் செய்தாலே இருமுகிறார்கள். கொரோனா பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் வருகிறது. சட்டமன்றத்துக்கு வந்தால் சுகாதார பெண் பணியாளர்கள் கையை கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். மூன்று நிமிடம் வரை கைகழுவ வேண்டும். ஏசியில் உட்காரக் கூடாது என்று பயமுறுத்துகிறார்கள்.
ஏசி அறையில் உட்காரக் கூடாது என்றால் சட்டமன்றத்தில் நமக்கே பாதுகாப்பு இல்லை. நாளை முதல் மாஸ்க் போட்டுத்தான் சட்டமன்றத்துக்கு வர வேண்டும். ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது? இருமுவதற்கே பயமாக இருக்கிறது. இத்தாலியில் போப் ஆண்டவர் பேசும்போது ஒருவர் கூட இல்லை. சீன அதிபர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என நகைச்சுவையாகப் பேசினார்.
துரைமுருகனின் பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கொரோனா குறித்து தமிழகத்தில் அச்சம் தேவையில்லை. வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் துரைமுருகன் அச்சப்படுகிறார். தமிழகத்தில் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு வயதானாலும் அச்சப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றார்.
இதன்பின் பேசிய துரைமுருகன் சட்டமன்றத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள், கிருமி நாசினி தெளியுங்கள் என்றார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் சட்டமன்றத்துக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
**கவிபிரியா**�,