தீபாவளி சிறப்பு ரயில்கள் 15 சதவிகிதம் டிக்கெட்டுகளே முன்பதிவு!

Published On:

| By Balaji

கொரோனாவின் காரணமாக தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளிக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முன்பதிவு தொடங்கும் நாளில் ரயில் டிக்கெட்டுகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்து விடுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு கவுன்டர்கள் மற்றும் ஆன்-லைன் புக்கிங் முன்பதிவு ஆகியவை ஜூலை 7ஆம் தேதி தொடங்கியது. இருந்தபோதிலும் பொதுமக்களிடம் கொரோனா பயம் காரணமாக தீபாவளி முன்பதிவுக்குப் போதிய வரவேற்பு இல்லை.

சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் ரயில்கள் மற்றும் மதுரை, நெல்லை, நாகர்கோவில் வரை தினமும் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு குறைவாக உள்ளது. இதில் 10 முதல் 15 சதவிகிதம் டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் சிறப்பு ரயில்களை எப்படி இயக்குவது என்று தெரியாமல் தென்னக ரயில்வே யோசித்து வருகிறது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே உயரதிகாரி ஒருவர், “தமிழகத்தில் கொரோனா பயம் காரணமாக பொதுமக்கள் வெளியூர் செல்ல விரும்புவதில்லை. இதன் காரணமாகத்தான் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீபாவளிக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில்கொண்டு தீபாவளிக்குக் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share