கொரோனாவால் மன அழுத்தம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு!

Published On:

| By admin

கொரோனா தொற்று நோயின் காரணமாக கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று நோய் உலக மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், அடுத்த அலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் மக்கள் இருக்கின்றனர். கொரோனா வைரஸ் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. கொரோனா தொற்று காரணமாக மக்கள் பலவிதமான மனநல பாதிப்புகளுக்கு ஆளாவதை நாம் பார்த்து வருகிறோம்.
நமக்கும் கொரோனா வந்துவிடுமோ, கொரோனா வந்தால் பிழைப்போமா, ஊரடங்கினால் வேலை போய்விட்டதே, சம்பளம் குறைந்துவிட்டதே, ஒருவாரம் தனிமையில் இருக்க வேண்டுமே, நம்மை ஒதுக்கிவிடுவார்களோ போன்றவற்றை சிந்தித்து அதன் காரணமாக மக்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று நோயின் காரணமாக கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதனால், மக்களின் மனநல ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், யார் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மனநல சுகாதார சேவையில் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவாரம் தனிமைப்படுத்துதல் மன அழுத்தம் அதிகரிப்புக்கான முக்கிய காரணமாகும்.
தனிமை, நோய்த் தொற்று பயம், நோய் காரணமாக தனக்கும், தனது அன்புக்குரியவர்களுக்கும் ஏற்படும் துன்பம் மற்றும் எதிர்பாராத உயிரிழப்பு, நிதி நெருக்கடி உள்ளிட்டவை கவலை மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணிகளாக அமைகின்றன. அதுபோன்று ஓய்வு இல்லாமல் வேலை பார்க்கும் சுகாதார ஊழியர்களிடையேயும் தற்கொலை எண்ணமும் அதிகரித்துள்ளது.
தொற்று நோயின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் பெண்கள்தான். தொற்றுநோய் இளைஞர்களின் மனநல ஆரோக்கியத்தை பாதித்து, தற்கொலை எண்ணத்தையும், தனக்கு தானே தீங்கை ஏற்படுத்திக் கொள்ளும் மனநிலையையும் உருவாக்குகிறது. மன அழுத்தத்தால் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆஸ்துமா, புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு எளிதில் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதன்மூலம், பல நாடுகளில் மனநல சார்ந்த பிரச்சினைகளுக்கான சிகிச்சையில் எந்தளவு பற்றாக்குறை நிலவி வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது. தற்கொலை தடுப்பு உட்பட மன ஆரோக்கியத்திற்கான சேவைகளில் பெரும் இடைவெளி இருப்பதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்த நிலையில் சிறிது மேம்பாடு காணப்பட்டது. ஆனால் இன்றும் ஏற்கனவே மற்றும் புதிதாக மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான ஆலோசனையும், சிகிச்சையும் இல்லை.
உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள், கொரோனா தொற்று நோயின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டவர்களுக்கு மனரீதியான, உளவியல் ரீதியான சிகிச்சைகளை 90 சதவிகித நாடுகள் வழங்குகின்றன. ஆனால், நீண்டகாலத்துக்கு அவை வழங்கப்படுவதில்லை. இன்னும் உளவியல் ரீதியான சிகிச்சையில் பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment