குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளதாலும், டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதாலும் நடப்பு ஆண்டு இலக்கை விஞ்சி குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்ததால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு ஜூன் 12இல் நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து தற்போது சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர் 1.05 லட்சம், திருவாரூர் 1.01 லட்சம், நாகப்பட்டினம் 4,500, மயிலாடுதுறை 96,750, திருச்சி 12,250, அரியலூர் 3,000, கடலூர் 40,600 ஏக்கர் என மொத்தம் 3,63,100 ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தஞ்சாவூர் ஒரு லட்சம், திருவாரூர் 92,000, நாகப்பட்டினம் 18,000, மயிலாடுதுறை 92,000, திருச்சி 8,000, அரியலூர் 2,500, கடலூர் 40,000 என மொத்தம் 3,52,500 ஏக்கரில் குறுவை நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன.
மேலும், இந்த மாவட்டங்களில் ஏறத்தாழ 24,000 ஏக்கரில் நடவுக்கான நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. பல இடங்களில் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவை இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள வேளாண்மைத் துறையினர், ‘‘குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் ரசாயன உரங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவற்றை இலவசமாகவும், விதைகள் உள்ளிட்டவற்றை மானிய விலையிலும் வழங்கியதாலும், டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதாலும் நடப்பு ஆண்டு இலக்கை விஞ்சி குறுவை நெல் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை 15,000 கன அடியாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
**-ராஜ்**
.�,