நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி அடுத்த ரெட்டியார் பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி இல்லத்தில் கடந்த ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். முன்னாள் மேயரின் இல்லத்திலேயே நடந்த இந்த கொலை சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நெல்லை திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், 3 பேரையும் கொலைசெய்தது தான்தான் எனக் கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். இவ்வழக்கும் அடுத்த சில நாட்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. கார்த்திகேயனை காவலில் எடுத்த சிபிசிஐடி அதிகாரிகள், பல்வேறு கோணங்களில் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கார்த்திகேயனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் தாயாரும் திமுக பிரமுகருமான சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் இன்று (அக்டோபர் 30) கைது செய்தனர். மதுரையில் அவர்களை கைது செய்த அதிகாரிகள், பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரவுள்ளனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சீனியம்மாளிடம் விசாரணை நடைபெற்றது. இருவரிடமும் சிபிசிஐடி நடத்தும் விசாரணையில் கொலை தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
�,