|அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் புகார்!

Published On:

| By Balaji

சமீப காலமாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரிய விதத்திலேயே அமைந்துள்ளன. அந்த வகையில் செப்டம்பர் 21 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக சார்பாக நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை கடுமையான வார்த்தைகளால் தரக்குறைவாக சாடினார்.

“ஓட்டுக் கேட்கவும் சரியா வரல. நன்றி சொல்லவும் வரல. டெல்லியிலயே உட்கார்ந்திருக்கான். இங்க வந்தான்னா பன்னி சுடற துப்பாக்கிய எடுத்து சுட்டுடுங்க” என்றவர், ஒரு கணம் சுதாரித்துக் கொண்டு, ‘கொன்னுடாதீங்க. ரப்பர் குண்டு துப்பாக்கிய எடுத்து சுடுங்க அவனை “ என்று ராஜேந்திர பாலாஜி பேசியது காங்கிரஸார் இடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் கடிதம் அளித்துள்ளார் மாணிக்கம் தாகூர். இதுபற்றி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இன்று (அக்டோபர் 3) அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சாத்தூர் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எனக்கு எதிராக பயன்படுத்தக் கூடாத, தரக்குறைவான, கொச்சையான வார்த்தைகளை பேசியுள்ளார். இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் நானும், எனது குடும்பத்தினரும் காலடி எடுத்துவைக்கக் கூடாது என திறந்தவெளி மேடையிலேயே மிரட்டல் விடுத்துள்ளார். நான் எப்போது நாங்குநேரிக்கு சென்றாலும் என்னை சுட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். நான் விருதுநகர் மக்களின் பிரதிநிதி. அரசியலமைப்புச் சட்டப்படி எனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து விசாரிக்க எனக்கு முழு உரிமை உள்ளது. என்னை எனது விருதுநகர் தொகுதிக்குள் அனுமதிக்கவில்லை என்றால் நான் எப்படி நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்ப முடியும். ஆகவே, அவரது மிரட்டல் எனது பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது நாடாளுமன்ற பணிகளுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாத வகையில், இந்த விஷயத்தை உரிமை குழு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராஜேந்திர பாலாஜி சொன்னது போல என் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர் மீது மக்களவை சபாநாயகரும், தமிழக சட்டமன்ற சபாநாயகரும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share