Oசாலை பள்ளத்தில் மூழ்கிய கார்!

Published On:

| By Balaji

சென்னை சாலைகளில் திடீர் என ஏற்படும் சாலை பள்ளங்கள் வாகன ஓட்டிகளை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. 2017 ஏப்ரல் 11 ஆம் தேதி ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள சாலையில் திடீர் என ஏற்பட்ட பள்ளத்தில் சென்னை மாநகர பேருந்தும், கார் ஒன்றும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தைச் சென்னை வாகன ஓட்டிகளால் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.

இந்த நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகிப் பார்ப்பவர்களை ஒரு நொடி உறையச் செய்கிறது.

பிரேசிலின் ப்ளோரிஸ் டா சுன்ஹா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிப் பதிவாகியுள்ளது. அதில், ஒரு லாரி சாலையைக் கடந்து செல்லும் அந்த நொடி, சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் விழுகிறது. ஒரு நிமிடத்துக்குள் சாலை மளமளவெனக் கீழிறங்க, அவ்விடத்தில் ராட்சத பள்ளம் ஏற்படுகிறது. அதனை பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஓட்டுநர், நொடியில் கணித்து, தனது வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்தினார்.

ஆனால், அதற்குப் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று அந்த பள்ளத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து மூழ்கியது. அந்த காரில் வனேசா கவாக்னோலி என்ற பெண்ணும் அவரது மகளும் இருந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இருவரும் பள்ளத்திலிருந்து எழ முயல்வது வரை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள், இருவரும் சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினர் என்று தெரிவித்துள்ளன.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share