தொல்லியல் துறையின் கீழ் வரும் சுற்றுலாத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், அதற்கு முன்பே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 800 க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களுடன் கூடிய சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் சுற்றுலாத் தலங்கள், நினைவுச் சின்னங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல மற்றும் உள்துறை அமைச்சகங்களால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஆக்ரா, தாஜ்மகால் உள்ளிட்ட 3,691 பாதுகாப்பு நினைவு சின்னங்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்போது திறக்கப்படவில்லை. மொத்தமாக திறக்கப்படும் 821 சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் வடக்கு மண்டலத்தில் 114, மத்திய மண்டலத்தில் 155, மேற்கு மண்டலத்தில் 170, தெற்கு மண்டலத்தில் 279, கிழக்கு மண்டலத்தில் 103 இடங்களும் அடங்கும். இந்தப் பட்டியலில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள செயின்ட் மேரி தேவாலயமும் திறக்கப்படவுள்ளது.
**எழில்**�,