சென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை – சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் எனப் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று (நவம்பர் 2) நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இத்திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை தொடங்க மாட்டோம் என மத்திய அரசு தரப்பில், உறுதியளிக்கப்பட்டது.
மேலும், 8 வழிச் சாலை என்பது பசுமை நிறைந்த சாலை என கருத முடியாது என்றும் புதிய நெடுஞ்சாலையைத் தான் பசுமை வழிச் சாலை என அழைக்கப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் உள்ள பல்லுயிர் வகைகளைப் பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் அவை செயல்படவில்லை எனவும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையே, 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் வழக்கறிஞர் ரத்தினம் வாதிட்டார்.
பொதுமக்கள் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ஏன் ரத்து செய்ய கூடாது என கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,