ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை இன்று (செப்டம்பர் 2) தொடங்கினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எட்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சைப்ரஸ், பல்கேரியா, செக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து சைப்ரஸ் புறப்பட்டார்.
சைப்ரஸ் நாட்டுக்கு இன்று (செப்டம்பர் 2) செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் நிகோசைச் சந்தித்து இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இன்று முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை சைப்ரஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் எட்டாவது பெரிய முதலீட்டாளராக சைப்ரஸ் உள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் சுற்றுப்பயணம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து பல்கேரியா செல்லும் ராம்நாத் கோவிந்த் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பல்கேரியாவைத் தொடர்ந்து அவர் செக் குடியரசில் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு அதிபர் மிலோஸ், பிரதமர் ஆண்டிரெஜ் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அங்கு 60 இந்திய நிறுவனங்கள் பங்கேற்கும் வர்த்தகக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தில் வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தைகள் முக்கிய இடம்பெறும் எனக் குடியரசு தலைவரின் ஊடகச் செயலாளர் அசோக் மாலிக் கூறியுள்ளார்.�,