8கோபாலபுர கிரிக்கெட்!

public

கோபாலபுரத்தின் அந்த மாடி அறைதான் கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்திய அரசியல் மைதானத்தின் போக்கையே தீர்மானிக்கும் அறை. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அறையில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி வீசிய பந்துகள் இந்தியாவில் பலரது விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளன. தமிழகத்துக்கும், மாநில உரிமைக்காக போராடும் பல மாநிலங்களுக்கும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தவை இவரது அரசியல் பவுன்சர்கள்.

இவருக்கு எதிராக பேட் செய்கிறேன் என்று சொல்லி ஆடி, ரன் எடுக்க முடியாமல் அவுட் ஆகி மாடியேறி வந்து அரசியல் ரீதியாக சரணடைந்தவர்கள் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பல பேர்!

இப்படிப்பட்ட பெரும் வரலாற்றினைக் கொண்ட அந்த கோபாலபுரம் மாடி அறை என்ற மைதானத்தில் இப்போதும் கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கிறது. தேசிய அளவில் யார் வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் விதமாகப் பந்து வீசிய அந்த பழுத்த அரசியல்வாதியின் கைகள் இப்போதும் பந்து வீசிக்கொண்டிருக்கின்றன. ஆம்… கொள்ளுப் பேரன் மகிழன் ஒரு சிறு பிளாஸ்டிக் பேட்டை வைத்துக் கொண்டு எதிரே நின்று, ‘தாத்தா…..’ என்று மழலை மொழியில் அழைக்க, அவனுக்குப் பந்து வீசிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

பந்து வீச்சில் மட்டுமல்ல, எமர்ஜென்சி உள்ளிட்ட எத்தனையோ பந்துகளை அடித்து ஆடி சிக்ஸர்களைக் கிளப்பியவர் அந்த அரசியல் கிரிக்கெட் ஜாம்பவான். இப்போது பேரனுக்கு பந்துகளை வீச, அந்த மாடி அறையின் டீ பாய்களுக்கும், புத்தகங்களுக்கும் இடையே பந்துகளை அடித்து ஆடி தன் தாத்தாவின் முதுமை மைதானத்தில் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டிருக்கிறான் மகிழன்.

ஆம்… திமுக தலைவர் கருணாநிதி, தன் பேரன் அருள்நிதியின் மகன், அதாவது தன் கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிவருகிறது.

கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்துவருகிறார். அவ்வப்போது அவரைப் பார்க்கும் தலைவர்களுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுவந்தன. இடையில் முரசொலி பவள விழாக் கண்காட்சி அரங்கு, அண்ணா அறிவாலயம், சிஐடி காலனியிலுள்ள தனது இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கும், மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் சில முறை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சென்று வந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்தின் முன்பு தொண்டர்களையும் சந்தித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி புத்துணர்வு பெறும் வகையில் தமிழரசுவின் பேரன் மகிழனை மாலை நேரங்களில் கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று கருணாநிதியுடன் விளையாட விடுகின்றனர். இதனால் பல மாலை நேரங்களை கருணாநிதி மகிழனுடனே கழித்துவருகிறார்.

இந்நிலையில் மு.க.தமிழரசுவின் பேரன் மகிழனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொள்ளுப் பேரன் பிளாஸ்டிக் பேட்டைப் பிடிக்க, கருணாநிதி அமர்ந்தவாறு பந்தைப் போடுகிறார். அதனை கருணாநிதி மகள் செல்வி, தமிழரசு மனைவி மோகனா உள்ளிட்டோர் ரசித்துக் கை தட்டுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் புத்துணர்வு பெற்றுவருகிறார். வீடியோவைப் பார்த்த திமுக தொண்டர்கள் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்ற கலைஞரின் குரல் மீண்டும் ஒலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுகின்றனர்.

’மீண்டும் களத்துக்கு வந்து, அடித்து ஆடுங்கள் தலைவரே…’ என்று உருக்கத்திலும் உற்சாகத்திலும் மிதக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *