இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ’ படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.
1980இல் பாரதிராஜாவின் `நிழல்கள்’ படத்தில்தான் வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்தனர். அப்படத்தில் இடம் பெற்ற `பொன்மாலை பொழுது’ பாடல் மூலமாக வைரமுத்து பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின்பு `அலைகள் ஓய்வதில்லை’, `காதல் ஓவியம்’, `மண்வாசனை’, `ஒரு கைதியின் டைரி’ போன்ற படங்களில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து ஆகிய மூவர் கூட்டணி இசைப் புரட்சி செய்தது.
1985 இல் வெளிவந்த `முதல் மரியாதை’ திரைப்படம் தான் இளையராஜா – வைரமுத்து இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமானது. இதன் பின்னர் 1986 இல் வெளிவந்த `கடலோரக் கவிதைகள்’ படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன் பின்பு இருவரும் இணையவில்லை.
பாலாவின் `பரதேசி’ படத்தில் இருவரும் இணைகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையாகவில்லை. அப்படத்தில் இடம்பெற்ற `செந்நீர்தானா செந்நீர்தானா’ பாடலை இளையராஜா பாடுவதாக இருந்தது. பின்னர் அவரின் தம்பியான கங்கைஅமரன் பாடினார். கடைசிவரை இருவரும் இணைய மாட்டார்களா? என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அதை உடைக்கும் விதமாக சிம்புவின் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ’ படத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் இணைந்துள்ளனர். தர்மதுரை படத்திற்கு பிறகு யுவன்சங்கர் ராஜா இசையில் `ஏ ஏ ஏ’ படத்தில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார். 1986க்குப் பின் தற்போது 2017இல் தான் இருவரும் இணைந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்துள்ளதால், மீண்டும் இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.
�,”