நாட்டில் உள்ள முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்ப, மோடி மற்றும் அமித் ஷா ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என ராகுல் காந்தி நேற்று (அக்டோபர் 13) மகாராஷ்டிராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி 288 தொகுதிகளுக்குச் சட்டப்பேரவைத் தேர்தலும், அதைத் தொடர்ந்து, 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் லடூர் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். இக்கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நிர்வாகம் படுதோல்வி அடைந்துவிட்டது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
மேலும், “நாட்டில் உள்ள முக்கியப் பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்ப மோடி மற்றும் அமித் ஷா, ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தற்கொலை விவகாரம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. பெரும் பணக்காரர்களுக்குக் கடன் தள்ளுபடி அளித்த விவகாரங்களிலும் ஊடகங்கள் வாய் மூடியே இருந்து வருகிறது.
சந்திரயான் 2 மிஷன் சோதனை பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், வேலைவாய்ப்பு குறித்து இளைஞன் கேள்வி கேட்டால், அவனை இந்த அரசாங்கம் நிலாவைப் பார்க்கச் சொல்கிறது. 370வது சட்டப்பிரிவு, சந்திரயான் 2 குறித்து அவ்வளவு பேசும் மத்திய அரசு, மக்கள் படும் பிரச்சினைகளைப் பேச மறுத்து விடுகிறது. ரூபாய் 5.50 லட்சம் கோடி கடன் தொகையை 15 வசதி படைத்தவர்களுக்காகப் பிரதமர் மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. தள்ளுபடி செய்ததன் மர்மம் என்ன என்பதை இந்த அரசு விளக்க வேண்டும்.
பணமதிப்பழிப்பின்போது, ஏழைகள் மட்டுமே கஷ்டப்பட வேண்டியிருந்தது. அதானி அல்லது அம்பானி பணத்தை எடுக்க வரிசையில் நின்றார்களா? விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் நின்றார்களா? மொத்த பணமும் நீரவ் மோடி, அம்பானி ஆகியோரின் கணக்குகளில் அல்லவா சென்றது” என்று ராகுல் காந்தி கூறினார்.
மேலும், மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பைப் பற்றிக் கூறிய ராகுல் காந்தி, “2017ஆம் ஆண்டு டோக்லாமில் இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் ஊடுருவிய விவகாரம் தொடர்பாக, சீன அதிபருடன் ஏன் பிரதமர் பேச்சு நடத்தவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
�,