உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில், உதகையில் சாக்லேட் திருவிழா நடைபெற்று வருகிறது. பல வடிவங்களில் தயார் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகள் பொதுமக்களைக் கவர்ந்து வருகிறது.
சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட்டுக்குத் தனி சுவை உண்டு. சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வரும்போது இந்த சாக்லேட்டை தவறாமல் வாங்கி செல்வார்கள். தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் ஆண்டுதோறும் ஊட்டியில் சாக்லேட் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சாக்லேட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு சாக்லேட்டில் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் சிலை மற்றும் சாக்லேட்டில் தயாரிக்கப்பட்ட உதகையின் அடையாளமாக விளங்கும் கல் பங்களா, பழங்குடியினர் வீடு உள்ளிட்டவை மக்களை அதிகம் ஈர்த்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 120 கிலோ சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட ‘2020’ ஆண்டின் வடிவம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோ செடி வடக்கு பகுதியில் 20°C மற்றும் தெற்கு பகுதியில் 20°C வெப்பநிலையில் வளரும் தன்மை உடையது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த மண்பாண்டங்கள், தமிழ் எழுத்துகள் ஆகிய வடிவங்களில் சாக்லெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர மூங்கில் அரிசி, தினை, சாமை போன்ற எட்டு வகை தானியங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சாக்லேட்டுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, இதை மக்கள் ஆர்வத்துடன் ருசித்து வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ 300 ரூபாய் முதல் கிலோ 3,500 ரூபாய் வரை விலை கொண்ட பல வகையான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.�,”