தன்னுடைய குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து செஞ்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி வடிவழகன், துளசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கணவன்,மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்ததால், துளசி ஆந்திராவில் உள்ள அவருடைய தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அப்போது துளசியின் செல்போனை ஆராய்ந்த வடிவழகன், தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை துளசி கொடூரமாக தாக்கி, அதை வீடியோ எடுத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வடிவழகன் காவல்துறையில் மனைவி துளசி மீது புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் சத்தியமங்கலம் காவல் துறையினர் துளசி மீது சிறார் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆந்திரா சென்ற போலீசார் அவரை கைது செய்து விழுப்புரத்துக்கு அழைத்து வந்தனர். சந்தேகத்தின்பேரில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு எந்தவித மனநல பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் பாரதி சான்றிதழ் வழங்கினார். அப்போது, குழந்தையை தாக்கியது தொடர்பாக வருந்துகிறீர்களா என கேட்டதற்கு வருந்துவதாகவும் துளசி தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் என்பவரை காதலிப்பதாகவும், அதனால் கணவர் மீது இருந்த வெறுப்பை குழந்தை மீது காட்டியதாகவும் துளசி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். கணவர் மீதும், குழந்தை மீதும் பாசம் இல்லை என்பதை காட்டுவதற்காக குழந்தையை அடித்து, அதை வீடியோவாக எடுத்து பிரேம்குமாருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. தற்போது, பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், செஞ்சி குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் துளசி இன்று(ஆகஸ் 30) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
**-வினிதா**
�,