அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக க்ளினிக்குகளை வைக்கக் கூடாது என்று தெலங்கானா அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாக மருத்துவப் பயிற்சி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இது இட மாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்திருக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தத்தை தெலங்கானா அரசு நேற்று (ஜூன் 8) பிறப்பித்தது. இந்த நிலையில் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு தெலங்கானா ஜூனியர் டாக்டர் அசோஸியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து கொண்டே தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிகின்றனர். மேலும், பல மருத்துவர்கள் தனியாக க்ளினிக்குகளையும் வைத்து நடத்துகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் அவர்கள் பணிபுரியும் நேரம் குறைவாக உள்ளது. மேலும், சில அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பாதி நேரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இதை சரி செய்யும் வகையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக க்ளினிக்குகளை வைக்கக் கூடாது என்ற உத்தரவை தெலங்கானா அரசு பிறப்பித்தது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை, அதனால்தான் நாங்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து கொண்டே தனியார் மருத்துவப் பயிற்சிகளில் ஈடுபடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சட்டத் திருத்தம், சிறப்பு மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் எம்.பி.பி.எஸ் தகுதியுடைய சிவில் அசிஸ்டென்ட் சர்ஜன் என்று அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.