Oடிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

Published On:

| By Balaji

பெண் எஸ்பி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சென்னை திரும்புகையில், மாவட்ட எல்லையில் வரவேற்ற பெண் எஸ்பி ஒருவரை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து பெண் எஸ்பி, டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்த நிலையில், ராஜேஷ் தாஸ் தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதே சமயம் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும்  வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  2002ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிய ரவீந்திரநாத் மீது, பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நான்கு மாதங்களே டிஜிபியாக இருந்த ரவீந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்தார். சட்டம் ஒழுங்கு பணியிலிருந்த ஒரு டிஜிபி சஸ்பெண்ட் ஆவது அதுதான் முதல்முறை.

இந்த நிலையில் பெண் எஸ்பிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் ஏன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.  இதுகுறித்து நாம் விசாரித்ததில், “ரவீந்திரநாத் மீதான புகாரின் மீது விசாரணை நடத்தி, அந்த புகாரின் மீது அடிப்படை முகாந்திரம்  இருப்பதாக அறிக்கை வந்த பிறகுதான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தற்போது ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாக கமிட்டியில் உள்ள ஏடிஜிபி சீமா அகர்வால் விசாரணை நடத்துவதை, டிஜிபியாக இருக்கும் ராஜேஷ் தாஸ் கேள்வி எழுப்பலாம்.  இது ஒரு சட்ட சிக்கலையும் உருவாக்கும்.

எனவே, ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில்  விசாரணை  கமிட்டி அமைத்து அறிவித்தார்கள். அதனால்தான் அவர், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற இரு நாள் தாமதமாகிவிட்டது. தற்போது சிபிசிஐடியும், விசாக கமிட்டியும், விசாரணை நடத்தி பாலியல் புகார் மீது அடிப்படை முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்தால் ராஜேஸ் தாஷை முதல்வர் சஸ்பெண்ட் செய்ய சொல்லியிருக்கிறார்.  அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம்… ஆனால் இவ்வளவு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்துவிட்டார். எனவே புகார் மீது முகாந்திரம் இருந்தால் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள் என முதல்வர் கூறியிருக்கிறார்” என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பாலியல் புகாரின் மீதான உண்மைத்தன்மை தெரியவரும் நிலையில் ராஜேஷ் தாஸ் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா என ஐஜி, எஸ்பி மட்டத்திலான உயர் காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share