gகருத்தை திரும்பப் பெறமாட்டேன்: சீமான்

Published On:

| By Balaji

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான கருத்தை திரும்பப் பெற மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில், “ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீமானுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகம், தேர்தல் ஆணையம், விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்

காங்கிரஸாரின் எதிர்ப்பைத் தொடர்ந்து சென்னையிலுள்ள சீமான் வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது இரு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி தொடர்பாக தான் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 14) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நான் பேசியதில் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொண்டுதான் வந்திருக்கிறேன். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியே கொண்டுவரவும், வெளியே இருக்கும் என்னை சிறைக்கு அனுப்பவும் காங்கிரஸ் கட்சி போராடுகிறது. வேறு எந்த மக்கள் பிரச்சினைக்கு அக்கட்சி போராடியுள்ளது” என்று தெரிவித்தார்.

வழக்கினை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறிய சீமான், “பிரச்சாரத்தில் இவ்வாறுதான் பேச வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை ஏதும் விதிக்கவில்லை. எங்கள் இனத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தித்தான் நாங்கள் அரசியல் செய்வோம். என் மீது லட்சக்கணக்கான வழக்குகள் உள்ளன. 25 ஆண்டுகளாக இதைத்தான் பேசிவருகிறேன். ராஜீவ் காந்தி தொடர்பாக நான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறமாட்டேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டதாக பழிசுமத்திதான் இலங்கையில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள். அதனை நடத்தியது காங்கிரஸ், அதற்கு துணைபோனது திமுக என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை சீரழிந்ததற்கு காரணமே விடுதலைப் புலிகள்தான். தங்களைத் தவிர வேறு யாரும் தலையிடக்கூடாது என்று நினைத்தார்கள். சிங்கள ராணுவம் அழித்த தமிழர்களை விட சகோதர யுத்தம் என்று சொல்லி விடுதலைப் புலிகள் கொன்ற தமிழர்கள்தான் அதிகம். இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படை தொடர்பாக சீமானுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share