மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டது போன்று, வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்களை சென்னையில் மேலும் 15 இடங்களில் விரைவில் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், க்ளீன் சென்னை என்ற பெயரில் பொது இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர்களை நீக்கும் பணி நடைபெற்றது. அதுபோன்று வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் வாகன கழிவுகள் மூலம் சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் மற்றும் புதுப்பேட்டை,பேசின்பிரிட்ஜ், வில்லிவாக்கம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்களில் உள்ள காலாவதியான வாகன கழிவுகளை கொண்டு கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுறா மீன், இறால், நண்டு வடிவிலான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைவதோடு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வாகன ஓட்டிகள், நடை பயிற்சி மேற்கொள்வோர் இந்த சிற்பங்களுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இன்று காரில் சென்றவாரே உலோக சிற்பங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினும் பார்வையிட்டார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் நாட்களில் தலைமை செயலகம், விமான நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை, கோயம்பேடு உள்ளிட்ட 15 இடங்களிலும் உலோக சிற்பங்களை வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என்று ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருவான்மியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உலோக கழிவுகளால் ஆன கழுகு, கடற்கன்னி, ஏர் தழுவும் வீரன், படகுடன் கூடிய மீனவர், அழகிய கொம்புகளுடன் கலை மான், அதை பார்த்து பாயும் புலி என தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,