�சாத்தான்குளத்துக்குப் பிறகும் போலீஸ் திருந்தவில்லை… இன்ஸ்பெக்டர் ஓபன் டாக்!

Published On:

| By Balaji

வாகன சோதனையில் இன்ஸ்பெக்டரையே காவல் துறையினர் கடுமையாக பேசிய விவகாரம் வெளிவந்துள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பழனி கார்த்திகேயன். இவர் சில நாட்களுக்கு முன்பு டு வீலரில் திருவான்மியூரில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பரங்கிமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் அவரை வழிமறித்த காவலர்கள், எங்கே போகிறீர்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் பழனி கார்த்திகேயன், ‘வீட்டுக்குச் செல்கிறேன்’ என்று கூற, “வீட்டுக்குப் போ, எங்கேயாவது போ. வண்டி நம்பரச் சொல்லு” என்று கடுமையாகக் கூறினர்.

இதுதொடர்பாக திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை தொடர்புகொண்டு தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் பழனி கார்த்திகேயன். நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், “என்னோட தம்பி வீட்டுக்குப் போய்ட்டு வந்தேன். இங்க ஈசிஆர் பாயிண்ட்ல ஒரு எஸ்எஸ்ஐ, ஏட்டு ஒருத்தர் சோதனை பண்ணாங்க. வண்டிய நிறுத்துனேன், ஹெல்மெட்டும் போட்டுருந்தேன். எங்க போறீங்கனு கேட்டாங்க. வீட்டுக்குப்போறேன்னு சொன்னேன். நீ வீட்டுக்குப் போ எங்கேயாவது போன்னு சொல்றாங்க. நான் இன்ஸ்பெக்டரா இருக்கட்டும், இல்லாமல் போகட்டும். வண்டிய நிறுத்தாம போனா இப்படி பேசலாம். வண்டிய நிறுத்தி பதில் சொன்னாலும் இப்படி பேசினா, வேற ஒருத்தனா இருந்தா சண்டைதான் போடுவான்” என்று விவரித்தார்.

எதிர்முனையில் பேசிய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், “அது ரைட்டுதான். ஏற்கனவே பொதுமக்கள்கிட்ட ஒழுங்கா பேசுங்க. மிஸ் பிகேவ் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு வர்றோம். அவர்கிட்ட பேசுறேன்” என்று கூறினார்.

பின்னர் சோதனையில் இருந்த காவல் துறையைச் சேர்ந்த மாணிக்கத்திடம் செல்போன் சென்றது. அவர், “ஐயா… வண்டி நம்பர்தான் நோட் பண்ணோம்” என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், “பொதுமக்கள்கிட்ட கண்ணியமா நடந்துகோங்கன்னு சொல்லுறோம்…குற்றம் நடக்காம பாத்துக்கறதுதான் நம்ம வேலை…திருச்சி ரேஞ்சுல பொதுமக்களிடம் கண்ணியமா நடக்காத, மிஸ்பிகேவ் பண்ண 80 பேருக்கு சார்ஜ் மெமோ கொடுத்திருக்காங்க தெரியுமா? தெரிஞ்சும் பழைய மாதிரியே பேசுறீங்களே. என் பேட்ச் மெட்ங்கிறதால என்கிட்ட சொன்னாரு. கூடுதல் ஆணையர்கிட்ட சொல்லியிருந்தா, நான் விசாரணைக்கு ஆஜராகனுமா சொல்லு…அவரிடம் மன்னிப்பு கேளுங்க.” என்று கூறி முடித்தார்.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து ‘வாங்க காவல் நிலையம் போகலாம்’ என்ற தலைப்பில் ஆடியோ ஒன்றையும் பேசி வெளியிட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் பழனி கார்த்திகேயன். “இவ்வளவு நடந்ததற்குப் பிறகும், உயரதிகாரிகள் அறிவுறுத்திய பின்பும் கீழ் மட்டத்தில் இருக்கும் காவல் துறையினர் யாரும் திருந்தவில்லை என்பது தெரிகிறது. மாஸ்க், ஹெல்மெட் அணிந்திருந்தேன்…ஆவணங்களும் உள்ளன. அடையாள அட்டைக்கு என்னுடைய போலீஸ் ஐடி கார்டும் உள்ளது. நான் முறையாக இருந்தும், என்னிடமே முறையின்றி பேசினார்.

வண்டியைவிட்டு இறங்கி ‘சாத்தான்குளம் சம்பவம் போல் இன்னும் 10 நடந்தாலும் நீங்க திருந்தமாட்டீங்க’ என்று சொன்னேன். என் நண்பர் இன்ஸ்பெக்டர் என்பதால் அவர் கூறிய பிறகு சாரி கேட்டார்கள். நான் போலீஸாக இருந்தாலும், அவர்களுக்காக வருந்துகிறேன். பொதுமக்களோடு பழகும் கடைமட்ட காவலர்களின் அணுகுமுறைதான் போலீஸின் நடத்தையை தீர்மானிக்கும். ஆனால், அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதை நான் நாள்தோறும் நிரூபிக்க முடியும்” என்றும் குறிப்பிட்டார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share