ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செப்டம்பர் 5ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை, வாரத்தின் வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் அவரது குடும்பத்தினர் சந்தித்துப் பேசிவருகின்றனர். அப்போது, சிதம்பரம் வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுப்பதை அப்படியே ட்விட்டரில் பதிவு செய்கின்றனர்.
திகார் சிறையில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக்கொள்ள ஒரு வாரத்திற்கு ரூ.1,500 அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில், தனக்கு தேவைப்படும் ஷேவிங் கிரீம் உள்ளிட்ட பொருட்களை சிதம்பரம் வாங்கிக்கொள்கிறார். சிறையில் உணவைக் குறைத்துக்கொண்டு தேனீரை அதிகப்படுத்தியுள்ளார் சிதம்பரம். இதற்கிடையே ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் கடைசி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார் சிதம்பரம்.
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் தரப்பு இன்று (அக்டோபர் 3) தாக்கல் செய்த மனுவில், “சிதம்பரத்திற்கு 74 வயது ஆகிறது. சிறைக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை குழந்தை போல பலகீனமாகிவிட்டது. தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திற்கு வழங்கப்படும் உணவும் அவருக்கு பழக்கமானதாக இல்லை. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட பிறகு சிதம்பரம் 4 கிலோ எடை குறைந்துவிட்டார். அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனாவது வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டார். ஆனால், நீதிபதிகளோ, தலைமை நீதிபதிதான் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை பட்டியலிடுவார் என்று கைவிரித்துவிட்டனர்.
இதற்கிடையே சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், திகார் சிறையிலிருந்து ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்,
“ப.சிதம்பரத்தின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு வீட்டு உணவுக்கு அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு சிபிஐ தரப்பிலிருந்து எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. சிதம்பரம் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவை, ஒருவேளை மட்டும் வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக சிதம்பரம் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற சைவ உணவுகளையே விரும்பிச் சாப்பிடுவார். அதனால் சைவ உணவுகளே பெரும்பாலும் அவருக்கு வீட்டிலிருந்து தயாரித்து எடுத்துவரப்படும் என்று கூறப்படுகிறது.
இதுபோலவே, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் தரப்பு வைத்த கோரிக்கைக்கும் சிபிஐ சம்மதம் தெரிவித்தது. இதனையடுத்து, சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் ஆஜராகிவிட்டு வந்த ப.சிதம்பரத்தை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன். அவர் மன உறுதியுடன் நின்றார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கருதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
�,”