மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாட்டை மேற்கொண்டதற்காகத் தமிழகத்துக்கு 12 தேசிய விருதுகள் நேற்று (அக்டோபர் 23) வழங்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கிய பணிகளான அடிப்படை சுகாதாரம் மற்றும் கட்டமைப்புக்கான நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்துக்கு 12 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளைத் திறம்படச் செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு *மின்னணு பஞ்சாயத்து புரஸ்கார்* விருது வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளித்து திறனை மேம்படுத்திய வகையில், மாவட்ட அளவில் சேலம் மாவட்டத்துக்கும், ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் ஆகிய ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகள் அளவில் சேலம் மாவட்டம் – கோனூர், கோவை மாவட்டம் – மத்வராயபுரம், நாமக்கல் மாவட்டம் – அரசபாளையம், ஈரோடு மாவட்டம் – வெள்ளாளபாளையம், மதுரை மாவட்டம் – கோவில்பாப்பாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் – எஸ்.யூ.வனம் ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளுக்கு *தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது* வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ராவணப்புரம் ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்ததற்காக *நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கெளரவ கிராம சபை தேசிய விருதும்*, தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் ஊராட்சிக்கு *குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதும்* என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன
இந்த விருதுகளை மத்திய வேளாண், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமிருந்து தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.
“தேசிய அளவில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைத் தமிழகம் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, 2012 முதல் இதுவரையில் மாநில அளவில் 12 தேசிய விருதுகள், மாவட்ட அளவில் 19 தேசிய விருதுகள், ஊராட்சி ஒன்றிய அளவில் 12 தேசிய விருதுகள், கிராம ஊராட்சிகள் அளவில் 43 தேசிய விருதுகள் என மொத்தம் 86 விருதுகளைத் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. தற்போது 12 விருதுகள் வழங்கப்பட்டது தமிழகத்துக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது” என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக அமைச்சர் வேலுமணி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இயந்திர உற்பத்தி பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள செயலாக்க மானியத்தை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.�,