சர்ச்சைப் பேச்சுகளுக்குப் பெயர் போன அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டச் செயலாளர் தலைமையில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த வகையில் நவம்பர் 16 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, “உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமியின் அரசை உள்ளாட்சி யிலும் நாம் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக காரன் அண்ணாதிமுக காரனின் சட்டையைத் தொட்டான் என்றால் திமுககாரனின் சட்டையை கிழிக்கணும். நம்ம வீட்டுக் கதவை திமுககாரன் தட்டினான்னா திமுககாரன் வீட்டுக் கதவை உடைக்கணும். இதான் நமது கொள்கை. ஏண்டா என் கதவைத் தட்டினேனு சொல்லி நியாயம் கேட்கக் க கூடாது. முதல்ல உடைச்சிட்டு அப்புறம்தான் பேசணும்” என்கிறார் ராஜேந்திரபாலாஜி. கிழிக்கணும், உடைக்கணும் என்று அமைச்சர் சொல்லச் சொல்ல கூட்டம் ஆக்ரோஷித்து முறுக்கேறி கைதட்டுகிறது.
தொடர்ந்து பேசும் அமைச்சர், “ அதிமுக தொண்டர்களுக்கு என்ன வந்தாலும் எது வந்தாலும் நான் பாத்துக்குறேன். உங்க பின்னாடி நான் நிப்பேன்.மத்தவங்க மாதிரி நான் விட்டுட்டுப் போறவன் கிடையாது. கடைசி வரைக்கும் தொண்டனோட நிப்பேன். நீங்க ஜெயிக்கறதுக்கு என்னென்ன வழி இருக்கோ அத்தனை சித்து விளையாட்டுகளையும் விளையாடுவோம்” என்று ராஜேந்திர பேசப் பேச கைதட்டல் அதிகரித்தது.
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைக்கு ஆளுங்கட்சியினர் வித்திடலாம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்பதற்கான அத்தனை சித்து விளையாட்டுகளையும் விளையாடுவோம் என்று அமைச்சர் ஒருவரே பகிரங்கமாகப் பேசியிருப்பது பற்றி காவல்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் தயாராகின்றன.�,