பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையால் வெளியேற்றப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, ரோம் நகரில் உள்ள போப்பிடம் தனது நிலையை விளக்கிக் கூற அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதி கத்தோலிக்க கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த கன்னியாஸ்த்திரி ஒருவரை பிஷப் பிரான்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக 4 கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி என பிஷப் பிரான்கோ முல்லக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இதில் ஒருவர் லூசி கலப்புரா ஆவார்.
கன்னியாஸ்த்திரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து பிரான்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து லூசி கலப்புரா கன்னியாஸ்த்திரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கார் வாங்கியிருப்பதாகவும் கவிதை தொகுப்பை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டி பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் கான்வென்டில் தங்கியிருந்த அவரை அங்கிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் கீழ் செயல்பட்டு வரும் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்தது.
இந்தநிலையில், ”தன்னுடைய தரப்பு நியாயத்தைக் கூற வாய்ப்பு தரப்படவில்லை. கன்னியாஸ்திரிகள் மடத்திலிருந்து நீக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது. தனக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று லூசி கல்ப்புரா வாடிக்கனில் உள்ள சர்ச்சுகள் அமைப்பின் நிர்வாகி லியோனார்டு கார்டினல் சன்டரிக்கு எழுதினார். ஆனால் இந்த கடிதம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக லூசி கலப்புரா போப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”இந்த விவகாரத்தில் போப் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். தன்னுடைய வாழ்க்கை முறையை போப்பிடம் முன் வைக்க அனுமதி தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.�,