கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தது மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மக்களின் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று காலை நடைபெற்றது.
இதற்காக அழகர் மலையிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு நேற்று முன்தினம் மதுரை வந்தார். நேற்று மதுரை மாசி வீதிகளில் தேர்த் திருவிழா நடைபெற்று நிறைவடைந்து, இன்று காலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அறநிலையத்துறை சார்பிலும் காவல்துறை சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைக் காண மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் நேற்று இரவு முதல் வைகை ஆற்றுப்பகுதியில் மக்கள் குவியத் தொடங்கினர்.
ஆனால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி கள்ளழகரைத் தரிசிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதனைப் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பார்த்தனர். கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர். தங்கக் குதிரையில் சென்று பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி உள்ளதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்று மதுரை மக்களால் நம்பப்படுகிறது.
இந்த சூழலில் இந்த வைபவத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 50 வயதுடைய ஒரு ஆணும், 60 வயது உடைய ஒரு பெண்ணும் உயிரிழந்தது மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் கூட்ட நெரிசலில் சிக்கிக் காணாமல் போனவர்கள் குறித்த விபரம் மற்றும் வேறு ஏதேனும் விவரம் குறித்து அறிய மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேசமயத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பது தெரிய வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**