விசில்ப்ளோயர் புகார் கடிதத்திற்குப் பிறகு இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக், முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் செய்து இருப்பதாக நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இரு பக்க புகார் கடிதத்தை பெங்களூருவிலுள்ள நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ‘விசில்ப்ளோயர் பாதுகாப்புத் திட்டத்திற்கு’ கடிதம் எழுதப்பட்டது. அதன் பின்னர் தான் இந்த முறைகேடுகள் வெளிவரத் துவங்கியிருக்கிறது.
விசில்ப்ளோயர் புகாருக்குப் பின் கடந்த மாதம் மட்டும் இன்போசிஸ் பங்குகள் 10 சதவீதம் சரிந்தன. குறிப்பாக, அக்டோபர் 22ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக இந்நிறுவனத்தின் பங்குகள் விலை 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
இந்நிலையில், விசில்ப்ளோயர் புகாருக்குப் பின் தலைமை அதிகாரி சலீல் பரேக் நேற்று(நவம்பர் 6) முதன் முறையாக தனது தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் ஆய்வாளர்களை சந்தித்து உரையாற்றும் போது பேசிய அவர், “தலைமை நிர்வாக அதிகாரியாக, இந்த முக்கியமான நிறுவனத்தில் ஒரு பெரிய வணிக மாற்றத்தை வழங்க நான் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் பணியாற்றியுள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், என்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு நான் அனைவரையும் அரவணைத்து தான் செயல்படுகிறேன் என்றும் , எந்த வடிவத்திலும் பிரிவினைக்கு ஆதரவு காட்டியதில்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள்” எனக் கூறினார்.
விசில்ப்ளோயர் புகார் கடிதத்தில், ‘சென்னையை சேர்ந்த இன்போசிஸ் இயக்குனர்களான டி.சுந்தரம், டி.என்.பிரக்லாத் ஆகியோரை பற்றி சலீல் பரேக் மோசமாக பேசி உள்ளார். அவர்கள் இருவரும் மதராசிகள், அவர்களின் பேச்சை எல்லாம் கேட்க வேண்டாம். அவர்கள் நிறைய விதிகள் சொல்வார்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது’. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தான் சலீல் பரேக் கூறியுள்ளார்.
சலீல் பரேக் தற்போது வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையை மதிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் செய்யும் பணிகளில் கவனம் செலுத்தியதற்காக இன்போசிஸின் 2,30,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்; எங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்போசிஸும் நானும் அவர்களுடன் பணியாற்றுவதில் முழுமையாக உறுதியாக இருக்கிறோம் என்று கூற விரும்புகிறேன், ” எனக் கூறினார். அத்துடன், நிறுவனத்தை முன்னேற்றுவதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவதாகக் கூறுயிருக்கிறார்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ நிலஞ்சன் ராய் ஆகியோர் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிக்க ‘நெறிமுறையற்ற’ வழிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, விசில்ப்ளோயர்கள் இன்போசிஸ் வாரியம் மற்றும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. அமெரிக்கா மற்றும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் இப்போது இன்போசிஸ் நிறுவனத்தை விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தை தெளிவுபடுத்துமாறு கார்ப்பரேட் விவகார அமைச்சகம் இன்போசிஸிடம் கேட்டுள்ளது.
�,”