Tஹரியானாவில் தொங்கு சட்டமன்றம்?

Published On:

| By Balaji

தலைநகரான டெல்லியை ஒட்டி அமைந்துள்ள ஹரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 24) காலை தொடங்கியது. முடிவுகளில் ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தொங்கு சட்டமன்ற அமையும் அறிகுறிகளும் தேர்தல் முடிவுகளில் தென்படுகின்றன.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 36 இடங்களில் ஆளும் பாஜகவும், 31 இடங்களில் காங்கிரஸும் முன்னிலையில் இருக்கின்றன. இவர்களுக்கிடையே ஜனநாயக ஜனதா கட்சி 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தேர்தலுக்குப் பிறகான வாக்குக் கணிப்புகள் மனோகல் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன. ஆனால் இன்று (அக்டோபர் 24) காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் கட்டார் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கும் ஓபி தன்கர், கேப்டன் அபிமன்யு ஆகியோர் பின்னடைவில் இருக்கிறார்கள்.

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி இருக்கும் நிலையில் ஜனநாயக ஜனதா கட்சி 9 முதல் 10 இடங்களைப் பிடித்துவிட்டால் ஹரியானாவில் தொங்கு சட்டமன்றம் அமையும் நிலை உருவாகும். ஜனநாயக ஜனதா கட்சியே கிங் மேக்கராக அதன் தலைவர் துஷ்யந்த் சௌதாலா இருப்பார்.

ஹரியானாவில் இம்முறை பாஜக 75 இடங்களில் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மைக்கே தடுமாறும் நிலையில் முதல்வர் மனோகர் லால் கட்டாரை இன்று மதியம் 2 மணிக்கு பாஜக டெல்லி தலைமை அலுவலகத்துக்கு வருமாறு கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா அழைத்திருக்கிறார்.

கட்சி ஆரம்பித்து ஒருவருடமே ஆகியுள்ள ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதலாவிடம் காங்கிரஸ் கட்சி பேச ஆரம்பித்துள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற துஷ்யந்த்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தீபேந்திர ஹூடா, சௌதாலாவுடன் தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே அதாவது நேற்று மாலையே சந்திப்பை நடத்தியிருக்கிறார். இன்று துஷ்யந்த் சௌதாலா, “ஜஜகவின் கையில்தான் ஆட்சிக்கான சாவி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளரோ, “இது வெறும் ஆரம்ப கட்ட முன்னிலைதான். முடிவுகள் வரும்போது பாருங்கள்” என்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share