சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Balaji

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பொன்.மாணிக்கவேல் தரப்புக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியாற்றி வருகிறார். இவருக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நேற்று (நவம்பர் 20) நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “சிலைக் கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கைகளைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக உள்ள கூடுதல் டிஜிபியிடம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொன்.மாணிக்கவேல் இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. எந்தவிதமான விசாரணை விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை. கூடுதல் டிஜிபி மற்றும் டிஜிபி நடத்தும் எந்த ஆய்வுக் கூட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை. அதோடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள மற்ற அதிகாரிகளையும் கலந்துகொள்ளக் கூடாது என்று பொன்.மாணிக்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பொன்.மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஆனாலும் அவர் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.31.96 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை ஒரு வழக்கில்கூட அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில்தான் தொடர முடியும்” என்று வாதிட்டார்.

பொன்.மாணிக்கவேல் தரப்பில் வழக்கறிஞர் வி.செல்வராஜ் ஆஜராகி வாதிட்டார். அவர், “2018இல் உயர் நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலைச் சிறப்பு அதிகாரியாக நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. இதற்கு ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இதன் பின்னரும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைப் பணி செய்ய விடாமல் அரசு தடுத்தது. இந்த நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அமர்வும் கலைக்கப்பட்டது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதால்தான் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்பான அறிக்கைகளைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதே தவிர அவமதிப்பு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடவில்லை என்று குறிப்பிட்டனர்.

மேலும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின்னர் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பி, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோன்று சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவுக்குத் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share