�
நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வாழ்வாதாரத்தை இழந்துள்ள கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா லாரி ஓட்டுநர்கள், பதிவு பெறாத முடி திருத்தத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கி வந்தது. அதுபோன்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற நெசவாளர்களுக்கும் நிவாரணம் வழங்கிய நிலையில், இந்த வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்கள், ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரண தொகையான ரூ.2000 வழங்கப்படும். தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளைக் கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,